Skip to content
Announcing the winners of our 2020 Poems in Translation Contest in partnership with the Academy of American Poets. Read more.
from the April 2015 issue

Horoscopes

எங்கள் வீட்டு நீதிவான்

Ayya had great expectations of us. As soon as his children were born, he had their horoscopes cast by a famous astrologer of our village. We were seven siblings. Horoscopes were written for each of us in separate notebooks. Ayya bundled up all of them and locked them away in a wooden chest. We could neither peer at nor pore over them.

We were all born at home. And, as if by prior agreement, we were all born during the night. A midwife took care of all Amma’s deliveries. Sometime during the evening Amma would speak of the beginnings of piercing pains in her abdomen. Ayya would immediately go into action; there were three duties he had to fulfill. Only one house in our village boasted a timepiece that could be set in motion by winding it up. Ayya would borrow that clock so that the exact time of birth of his children could be recorded. A steel folding spring bed lay in the cattle shed. Ayya would bring it inside the house, set it up, spread a cotton mattress on it and make Amma lie down on it. The mattress, when spread out on the lax springs, would sag in the middle. Amma could lower herself into that hollow on her own, but to get out of it two people had to hold on to her and haul her out. That bed was an heirloom from Ayya’s family. He was born on it. So he believed the bed brought luck to all of his children. That we survived childbirth was not because we were smart or because Amma was clever. It could not be attributed even to the midwife’s skill. It was all due to that smart bed. 

Ayya’s third mission was to send word to the midwife.  No birth went amiss so long as that midwife was in charge. For every male child she delivered she was paid fifty paise and if it was a girl she got less than that. The delivery took place in a room created by screening off an area with a bamboo mat. As the lamp that lit the room used neem-oil, a particular, medicinal smell pervaded the room. So long as the midwife was inside the room, Ayya waited outside. Around midnight or sometime after, when the baby arrived, its cries would be heard clearly. Ayya would then look at the clock and note down the exact time in a notebook, wetting the pencil tip with his tongue. The astrologer would cast the horoscope according to that precise moment.

I came to know of all these procedures later on through hearsay. I was very young then. I did not even know to bite directly into a banana to eat it. I would only nibble at it from one side. The childbirth that I was witness to was my sister’s. She was the seventh child, the last. No baby was born in that house after her. This was a matter of astonishment to the people of our village. An average family had ten or twelve children.  Many surmised that when a girl finally arrived after a succession of boys, the couple had decided they had had enough. But neither Ayya nor Amma was motivated by any such consideration. It was revealed later on that an astrologer was responsible for their decision.

In those days, it was the custom to roll out a lemon from the delivery room. The midwife in charge always had a lemon at hand. As soon as the baby arrived she would roll it out of the room. The exact moment that the fruit exited the room would be registered and used to cast the horoscope. Ayya did not have much faith in this fruit-rolling practice. He would wait for the baby’s first cries. He contended that the wail was enough to give him the time of birth. Amma’s vote was for the fruit. The accident that followed my birth made Ayya change his stand.

Amma complained of some activity in her belly at about four in the afternoon and went to lie down inside the room. Ayya waited outside with his copybook, pencil, and tongue. Our dog Veeman lay by Ayya’s side, his chin on the floor and his eyes turned upward. The midwife was standing by Amma’s side. Amma was shouting deliriously and writhing in pain. But the baby would not budge. The midwife had tried all the tricks that she knew. Darkness was departing from the skies. All of a sudden, a little pink foot peeped out. It would take a few more seconds for the other foot to emerge. Birds raised a hue and cry with their demands for the day to break. The midwife took the risk of dragging me out by my foot and there I was! Usually when babies are born they come out head first, in a swimming position.  I was on my back looking up at the sky. Apparently, I had the desire to be different and innovative even then! My face was covered with membrane. I’d decided not to breathe and so the midwife had to turn me upside down and give me a good shake: she patted my back, but nothing seemed to work. Only when a hot needle pricked me on my forehead and chest did I let out my first cries. Ayya, unaware of all these goings-on inside the room, heard me cry and promptly noted down that time as the time of my birth. 

Until I was about twelve years old, I proudly showed off the streaks on my forehead and chest to my classmates at school. Then, gradually, the marks faded. The astrologer wrote down my horoscope according to the time Ayya had given him. He was certain that since I had come out with my face turned up, looking skyward, my birth was unique and I would attain sky-high fame. For a while, the people in my house believed this and I went up in their esteem. But very soon it was discovered that my horoscope was faulty. Since the midwife had been foolish enough to waste her time in reviving me instead of paying attention to the correct time of my arrival, it became difficult to have my horoscope done correctly. And I led a colorless life, absolutely clueless as to what I would become when I grew up.

Later when my younger brother and sister were born, the fruit method was revived. The midwife was handed a lemon and instructed to roll it out of the room. Some mishaps could occur with this method. The midwife could forget  to roll the lemon, or she might roll it a bit too fast so that it rolled off, beyond sight. Yet no such accidents occurred and all horoscopes were duly registered in good order. Ayya piled the horoscopes one on top of another and locked them securely inside a chest.

The horoscope that was talked about most, and in glowing terms, was that of my eldest brother Periannan. The astrologer predicted that Annan would become a great judge. This gave my parents immense joy. I heard them speak highly of Annan’s horoscope to neighbors and relatives. As far as they were concerned, Annan had already assumed the lofty pedestal of a judge. Annan, meanwhile, was repeating the eighth grade for a second time.

Many people thought that my Amma’s and Ayya’s horoscopes were a perfect match. But I was the only one who knew the truth. One night, I had spread out a mat on the veranda outside, intending to sleep there. Amma rarely let me sleep there. But sometimes I could wheedle her into allowing me to do so. The mornings after, I would find a blood-soaked leech clinging to my skin. It was difficult to identify whose blood it was, the leech’s or mine. Anyway, on that particular night, I lay there pretending to be asleep as I listened to Ayya talking to a relative who was visiting from some far-off place. It was then that I realized that the credit for getting Ayya married to Amma actually went to a lizard. Ayya had faced a dilemma, wondering whether he should choose Amma as his second wife or not. Climbing atop a wall of a temple, he had vowed that he would come down from his perch only if the gods gave him their blessing. As morning turned into afternoon and afternoon into evening, he waited and waited, until at last a lizard screeched. Ayya took that as the divine signal and, jumping off the wall, agreed to marry Amma. If that lizard had not given that cry of hunger, Amma would not have married. We would not have been born and Ayya would not have had the good fortune to acquire a pile of horoscopes and safeguard them in that chest.

I once asked Ayya how horoscopes were cast before the advent of clocks. We had to bide our time before approaching him with such questions. But there were occasions when he would begin to sing, keeping time by slapping his thigh. Those were the moments when we could hope for answers to our doubts, for it meant that he was in a happy mood. His answer was this: if babies were born during the day, the exact time could be calculated by measuring one’s shadow with one’s feet. He had once seen an “approver” calculating the correct time by measuring his own shadow. If it was night, there were people in the village who could tell the correct time by looking at the position of the stars. Astrologers would go by the time these people had recorded.

There was also another method to calculate the time of the day. Day or night, as soon as the baby arrived, they would carve a line into the trunk of a banana plant. Every family had banana plants in those days. One or two days later, the astrologer would come and measure the growth of the plant during this time, work out the time of birth, and cast the horoscope.

The borrowed timepiece disappeared the day after Amma’s delivery. Ayya folded the steel bed and returned it to the cowshed. Amma got up and gradually returned to her chores. Soon, a new hammock was found hanging from the roof. It was not uncommon to see two hammocks at the same time. The children came in rapid succession, with just a year or a year-and-a-half gap between them. The stench of a lamp burning neem-oil would envelop the entire house. The thirty-first day was purification day. After that, preparations for the next baby began in right earnest.

No astrologer who passed through our village left without paying our house a visit. Ayya would bring out the bundle of horoscopes from its box and hand it over to him.  The astrologer then scrutinized the horoscopes and made predictions that satisfied all those eager to know their future.  When all the horoscopes had been looked over, Amma would turn her gaze toward Ayya. Ayya would then speak.

“Look at the eldest boy’s horoscope carefully. Will he become a judge?”

His anxiety was obvious. This was the cue for the astrologer to go back to the horoscope and begin to write down some figures and calculations on the back cover of the notebook.

“Ha!” he would exclaim. “This aspect escaped my notice; I have never seen another horoscope with Mercury in such an exalted position. Mercury is the lord of education. Your son is sure to become a judge.”

That day the astrologer would be treated in grand style to a special feast.

Many such astrologers passed though our house. All were glib with their words and none of them ever contradicted what earlier ones had said. I think there must have been some sort conspiracy among them. Once, when I woke up at midnight, I saw something which gave me the shivers. A young astrologer with a large kumkum dot on his forehead and matted hair all spread out was sitting in front of a lamp, poring over the horoscopes. Ayya’s forehead and receding hairline shone like an upturned cockroach. Amma was chewing betel nut with her front teeth. Her head drooped like a withered flower. Her fingers had curled up on her cheek. Though they were sitting very near me, they seemed to be somewhere far off, immersed in their own thoughts.

“Demons get their strength at night, so children born at night have more demonic qualities than those born during the day. Lord Krishna was endowed with such qualities and that was what helped him slay the demon Kamsan. Not that it is any serious drawback. But seven children have been born in your house, one after another, during those dark hours. This demonic aspect is very dense about your house.”

He pronounced these words in a soft voice, partly in a prose style, partly as poetry, while lifting his hand, spreading his fingers as if he was setting a bird free.

Ayya and Amma were thunderstruck by this oracle.

Ayya asked in a quivering tone, “Is there anything we can do to counteract this effect?’”

“Certainly we could perform some rituals later on. But another baby should not be born at night here. The house will not be able to withstand that,” he said in an authoritative voice.

“So, what should we do now?”

He replied, “It would be best if you could send away a couple of your children and arrange for them to go to school elsewhere.”

That was how my second brother went to Mami’s house and went to a different school. There was talk of putting me into a boarding school. The day before I was to leave home, I went into the kitchen and saw my mother sitting in front of the lamp all by her herself and crying. When I asked her why she was crying, she silently wiped her face with the end of her sari. Tears flowed from her eyes even as she kept wiping them away. But no sound came from her. That was the last time we were all together as one family in that house.

The demons that the astrologer had predicted did not emerge from inside the house—they came from outside. They had heavy leather army boots on their feet. Houses, streets, playgrounds went silent. The earth and sky were transformed. Veeman ran away from home and never came back. My parents were not alive to see my Annan become anything. Twice he was caught by the police and had to go to court for riding his bicycle without lights at night. The prediction that he would do well in life and become a judge was proven wrong and he climbed the steps of the court only as a culprit.

I write this at night from Toronto.

“Nights are not for human beings. The dark hours belong to demons, they are harmful to us.” Ayya and Amma have repeated this so often.

But how do I determine when night begins and when it ends? It is midnight for me now where I am. It is still early in the evening in California, while in England night is at its fag end. In Ceylon, it is already tomorrow.

The bundle of horoscopes that Ayya had so carefully guarded comes to my mind. Our horoscopes were cast according to the time registered by the borrowed timepiece. The rightful owners of those horoscopes had never laid their hands on them. It now occurs to me that I should have tried to take a look at them at least once. All of us siblings were born at night from the womb of the same mother, delivered by the same midwife, on the same steel bed. When we scrambled off in different directions, we lost touch with everything and have no clue whatsoever about what happened to the horoscopes that Ayya had treasured. Today we live in different countries, under varied circumstances harboring our own individual sorrows.  Some of those lemons gathered speed and ran beyond the boundaries set for them. Some stopped right on target. Some did not go any further than that door.

எங்கள் வீட்டு நீதிவான் © Appadurai Muttulingam. By arrangement with the author. Translation © 2015 by Padma Narayanan. All rights reserved.

எங்கள் வீட்டு நீதிவான்

ஐயாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் சாதகத்தை எங்களூரில் பிரபலமான சாத்திரியாரைக் கொண்டு எழுதுவித்தார். நாங்கள் ஏழு பிள்ளைகள். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொப்பியில் முழுச் சாதகமும் எழுதப்பட்டிருந்தது. அந்த சாதகங்களை ஐயா ஒரு கட்டாக கட்டி பெட்டகத்துக்குள் வைத்து பூட்டிவிடுவார். அவற்றை பார்ப்பதற்கோ ஆராய்வதற்கோ எங்களுக்கு அனுமதியில்லை.

 

அம்மா எங்கள் எல்லோரையும் வீட்டிலே பெற்றார். சொல்லி வைத்தாற்போல நாங்கள் இரவிலேயே பிறந்தோம். அனைத்து பிரசவத்தையும் மருத்துவச்சிதான் பார்த்தாள். பின்னேரம் ஆனதும் அம்மா சாடையாக வயிற்றுக்குள் குத்துகிறது என்பார். ஐயா உடனே மூன்று காரியங்கள் செய்வார். எங்கள் கிராமத்தில் ஒரேயொரு வீட்டில் சாவிகொடுத்தால் ஓடும் கடிகாரம் இருந்தது. பிள்ளை பிறக்கும் சரியான நேரம் தெரியவேண்டும் என்பதால் ஐயா அந்த மணிக்கூட்டை இரவல் வாங்கி வருவார். மாட்டுக்கொட்டிலில் ஓர் இரும்புக் கட்டில் மடித்து வைக்கப்பட்டிருக்கும். ஐயா அதை எடுத்து விரித்து அதற்குமேல் தும்பு மெத்தை ஒன்றைப் போட்டு அதன் மேல் அம்மாவை படுக்க வைப்பார். குறுக்காக ஓடும் சங்கிலிகளின் மேல் மெத்தையை விரித்தால் அது நடுவிலே தொய்ந்துபோய் இருக்கும். அம்மாவால் தானாக பள்ளத்தில் படுக்க இயலும். எழும்ப வேண்டும் என்றால். இரண்டுபேர் அவரைப் பிடித்து இழுத்தால்தான் முடியும். ஐயா வீட்டு பரம்பரைச் சொத்து அந்தக் கட்டில். அவர் அந்தக் கட்டிலில்தான் பிறந்தார். ஆகவே அது அதிர்ஷ்டமானது என்று நம்பினார்கள். நாங்கள் உயிர் பிழைத்தது எங்களின் கெட்டித்தனமோ, அம்மாவின் கெட்டித்தனமோ, மருத்துவச்சியின் கெட்டித்தனமோ அல்ல. கட்டிலின் கெட்டித்தனம்.

மூன்றாவதாக ஐயா செய்யும் வேலை மருத்துவச்சிக்கு ஆள் அனுப்புவது. அந்த மருத்துவச்சி பார்க்கும் பிரசவம் பழுதாகாது. ஆண்பிள்ளை என்றால் ஐம்பது காசு. பெண் பிள்ளை என்றால் அதற்கும் குறைவு. ஒரு தட்டியால் மறைப்பு செய்து உருவாக்கிய அறைக்குள்தான் பிரசவம் நடக்கும். அங்கே எரியும் விளக்கு வேப்பெண்ணையில் வெளிச்சம் கொடுப்பதால் ஒருவிதமான நெடி அறையில் சூழ்ந்திருக்கும். மருத்துவச்சி உள்ளே இருக்கும்போது ஐயா வெளியே இருப்பார். நடு இரவிலோ அதைத் தாண்டியோ பிள்ளை பிறந்ததும் அது அழும் சத்தம் கேட்கும். அந்த நேரத்தை மணிக்கூட்டில் பார்த்து, ஒரு பென்சிலால் நாக்கை தொட்டு ஐயா கொப்பியில் எழுதி வைப்பார். சாதகம் கணிப்பதற்கு அந்த நேரத்தைதான் சாத்திரக்காரர் பயன்படுத்துவார்.

இதுவெல்லாம் எனக்கு பிறர் சொல்லித்தான் தெரிந்தது. அப்பொழுது நான் மிகச் சின்னன். ஒரு வாழைப்பழத்தை முழுதாக கடிக்கத் தெரியாது. பக்கவாட்டில் கடித்து உண்ணத்தான் தெரியும். நான் கண்ணால் பார்த்த பிரசவம் என் தங்கச்சி பிறந்தபோதுதான் நடந்தது.  அவள்தான் ஏழாவது, கடைசி. அதற்கு பிறகு எங்கள் வீட்டில் ஒரு குழந்தையுமே பிறக்கவில்லை. இது எங்கள் ஊர்க்காரர்களுக்கு  ஆச்சரியம். பத்து பன்னிரண்டு பிள்ளைகள் குடும்பத்தில் பிறப்பதுதான் வழக்கம். அடுத்தடுத்து ஆண் பிள்ளைகள் பிறந்து கடைசியில் ஒரு பெண்பிள்ளை பிறந்ததும் போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே பலரும் நினைத்தார்கள். அப்படியான எண்ணம் ஐயாவுக்கோ அம்மாவுக்கோ கிடையாது. ஒரு சாத்திரக்காரரின் கூற்றுத்தான் அப்படியான முடிவுக்கு காரணம் என்பது பின்னாலே தெரியவரும்.

அப்பொழுதெல்லாம் வழக்கம் பிரசவம் ஆனதும் தேசிக்காயை உருட்டிவிடுவதுதான். மருத்துவம் பார்க்கும் மருத்துவச்சி ஒரு தேசிக்காயை கையிலே வைத்திருப்பாள். சிசு பிரசவமானதும் தேசிக்காயை வெளியே உருட்டி விடுவாள். அறையை தாண்டி தேசிக்காய் உருண்டு வரும்போது அந்த நேரத்தை குறித்து அதன்படி சாதகத்தை கணிப்பார்கள். ஐயாவுக்கு தேசிக்காய் உருட்டுவதில் நம்பிக்கை இல்லை. குழந்தை பிறந்ததும் அழவேண்டும், அந்தச் சத்தம் நேரத்தை குறிப்பதற்கு போதுமானது என்று வாதாடுவார். அம்மாவோ தேசிக்காய் கட்சி. நான் பிறந்தபோது ஏற்பட்ட விபத்தினால் ஐயா தன் பிடிவாதத்தை பின்னர் மாற்றவேண்டி நேர்ந்தது.

பிற்பகல் நாலு மணிக்கு அம்மா வயிற்றுக்குள் குத்துகிறதென்று உள்ளே போய் இரும்புக்கட்டிலில் படுத்துக்கொண்டார். ஐயா வெளியிலே கொப்பியுடனும் பென்சிலுடனும் நாக்குடனும்  காத்திருந்தார். எங்கள் வீட்டு நாய் வீமன் தாடையை தரையில் வைத்து கண்களால் மேலே பார்த்துக்கொண்டு ஐயாவுக்கு பக்கத்தில் கிடந்தது. மருத்துவச்சி அம்மாவுக்கு பக்கத்தில் நின்றார். அம்மா துடிதுடியென்று துடித்து கத்தி குளறினார். ஆனால் பிள்ளை பிறந்த பாடில்லை. மருத்துவச்சி தனக்கு தெரிந்த வித்தையெல்லாம் செய்து பார்த்தார். இருள் வடிய ஆரம்பித்திருந்தது. திடீரென்று ஒரு சிவந்த கால் வெளியே தள்ளியது. மற்றக்கால் வெளியே வர இன்னும் சில நிமிடங்கள் பிடித்தன. பகலை ஆரம்பிக்கச்சொல்லி பறவைகள் சத்தமிடத் தொடங்கிவிட்டன. மருத்துவச்சி வந்தால் வரட்டும் என்று காலைப் பிடித்து இழுத்து வெளியே போட்டு நான் பிறந்தேன். வழக்கமாக குழந்தைகள் பிறக்கும்போது நீந்துவதுபோல முகம் பூமியை பார்த்து பிறக்கும். நான் வானத்தை பார்த்து பிறந்தேன். ஏதாவது புதுவிதமாக செய்யவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அப்போதே இருந்தது. என்னுடைய முகம் சவ்வினால் சுற்றிக்கிடந்தது. மூச்சு விடுவதில்லை என்ற முடிவோடு நான் இருந்ததால் மருத்துவச்சி என்னை பிடித்து தலைகீழாகக் குலுக்கினார். முதுகிலே தட்டினார். வழக்கமான தந்திரங்கள் ஒன்றும் வேலை செய்யவில்லை. பழுக்கக் காய்ச்சிய ஊசியை நெற்றியிலும் மார்பிலும் கீறினபோதுதான் நான் சத்தம் போட்டு அழுதேன். இதுவொன்றும் தெரியாமல் வெளியே குந்தியிருந்த ஐயா அப்போதுதான் நான் பிறந்ததாக நினைத்து நேரத்தை குறித்துக்கொண்டார்.

எனக்கு பத்து பன்னிரென்டு வயது வரும்வரை நான் என் நெற்றிக் கீறலையும் மார்புக் கீறலையும் என்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு பெருமையாகக் காட்டியதுண்டு. அதற்கு பின்னர் அந்தக் கீறல் மெல்ல மெல்ல மறைந்துபோனது. ஐயா குறித்த நேரத்தை வைத்து சாத்திரக்காரன் சாதகம் எழுதினான். நான் வானத்தை பார்த்துக்கொண்டு பிறந்ததால் என் பிறப்பு அபூர்வமானது, எனக்கு வான்புகழ் கிட்டும் என்று அவன் சொன்னான். ஒரு கணம் வீட்டிலே அதை நம்பி என் மதிப்பும் உயர்ந்தது. ஆனால் சீக்கிரத்தில் என் சாதகம் பிழையானது என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள். மருத்துவச்சி மூடத்தனமாக நான் பிறந்த சரியான நேரத்தை சொல்லாமல் எனக்கு உயிர் கொடுப்பதில் நேரத்தை வீணடித்ததால் என்னுடைய சாதகத்தை முறையாக கணிக்க முடியாமல் போனது. நானும் பிற்காலத்தில் நான் என்னவாய் வருவேன் என்ற அறிவு பெறாமல் உத்வேகம் குறைந்த வாழ்க்கையை ஓட்டினேன்.

எனக்கு பின்னர் தம்பியும் தங்கச்சியும் பிறந்தபோது தேசிக்காய் முறைதான் பின்பற்றப்பட்டது. மருத்துவச்சியிடம் தேசிக்காயை கொடுத்து அதை உருட்டிவிடச் சொன்னார்கள். ஆனால் இந்த முறையிலும் சில பிரச்சினைகள் இருந்தன. அவள் உருட்டுவதற்கு மறந்துபோகலாம். கண்களுக்கு படாமல் வேகமாக உருட்டிவிடலாம். ஆனால் எப்படியோ ஒரு விபத்தும் இல்லாமல் ஐயா சரியான நேரத்தை குறித்து அவர்களுக்கு முறையான சாதகங்கள் எழுதப்பட்டன. அந்தச் சாதகங்களை எல்லாம் ஐயா ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைத்து ஒரு கயிற்றினால் கட்டி பெட்டகத்தில் பூட்டி பாதுகாத்தார்.

அம்மாவும் ஐயாவும் அடிக்கடி மகிமைப் படுத்துவதும், தங்களுக்குள் பேசிப் பெருமைப் படுத்துவதும் பெரியண்ணருடைய சாதகத்தைப் பற்றித்தான்.  சாத்திரக்காரர் அண்ணர் பெரிய நீதிவானாக வருவார் என்று சொல்லியிருந்தது அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது. அயலவர்களிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அண்ணரின் சாதகத்தை மெச்சி அவர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் மட்டில் அண்ணர்  ஒரு நீதிவானாக ஏற்கனவே பதவியேற்றிருந்தார். அப்போது அவர் எட்டாம் வகுப்பில் இரண்டாவது தடவை  படித்துக்கொண்டிருந்தார்.

என் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் நடந்தது நல்ல சாதப் பொருத்தம் இருந்தபடியால் என்று நினைப்பவர்கள் இருந்தார்கள். ஆனால் அந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். நான் ஒருநாள் இரவு வெளிவிறாந்தையில் பாய் விரித்து படுத்திருந்தேன். அம்மா அப்படி படுக்க என்னை விடுவதில்லை ஆனால் அன்று எப்படியோ சம்மதம் பெற்றிருந்தேன். . காலையில் எழும்பும்போது உடம்பில் ஒட்டியபடி செத்த நுளம்பும் ரத்தமும் இருக்கும். அந்த ரத்தம் என்னுடைய ரத்தமா நுளம்பின் ரத்தமா என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. தூரத்திலிருந்து வந்திருந்த சொந்தக்காரர் ஒருவருடன் ஐயா பேசும்போது நான் தூங்குவதுபோலக் கிடந்தேன். என்னுடைய ஐயா அம்மாவை முடித்ததற்கு காரணம் ஒரு பல்லி என்பது எனக்கு அன்றைக்குத்தான் புலப்பட்டது. ஐயா இரண்டாம் தாரமாக அம்மாவை முடிப்பதா விடுவதா என்று முடிவெடுக்க முடியாமல் அவதிப்பட்டார். அதிகாலையில் ஒரு கோயில் சுவரில் ஏறிக் குந்திக்கொண்டு சாமி சம்மதம் கொடுத்தால்தான் கீழே இறங்குவேன் என்று அவர் பிடிவாதமாக சூளுரைத்துவிட்டார். காலை மத்தியானமாகி, மத்தியானம் மாலையாகியபோது ஒரு பல்லி கத்தியது. அதையே கடவுள் கொடுத்த சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு ஐயா சுவரிலிருந்து குதித்து விவாகத்துக்கு சம்மதம் சொன்னார். அன்று அந்தப் பல்லி பசியெடுத்து கத்தியிராவிட்டால் அம்மாவுக்கு கல்யாணம் நடந்திராது. நாங்களும் பிறந்திருக்கமாட்டோம். ஐயாவுக்கும் ஒரு கட்டு சாதகம் எழுதி பெட்டகத்தில் வைத்து பூட்டும் அதிர்ஷ்டம் கிட்டியிருக்காது.

மணிக்கூடு வருவதற்கு முன்னர் ஐயாவின் காலத்தில் எப்படி சாதகம் கணித்தார்கள் என்று அவரிடம் நான் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன். இப்படி கேள்விகள் கேட்க ஐயாவை அணுகுவதற்கு நாங்கள் யோசிக்கவேண்டும். ஆனால் சிலவேளைகளில் அவர் தொடையில் தட்டி பாட அரம்பிக்கும்போது அவரிடம் கேள்விகள் கேட்கலாம். அவர் சந்தோசத்தில் இருக்கிறார். பகலில் பிள்ளை பிறந்தால் ஒருவர் தன் நிழலை காலால் அளந்து சரியாக நேரம் கூறமுடியும். நான் சிறுவனாக இருந்தபோது அப்படி ஒருவர் தன் நிழலை அளந்து சரியாக மணி சொன்னதை கண்டிருக்கிறேன். இரவு நேரமாக இருந்தால் நட்சத்திரங்களின் நிலையை வைத்து நேரம் சொல்பவர்கள் கிராமங்களில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கணித்து கொடுத்த நேரத்தை வைத்து சாதகம் எழுதிவிடுவார்கள்

இதுதவிர இன்னொரு முறையும் இருந்தது. பகலோ இரவோ குழந்தை பிறந்ததும் ஒரு வாழை மரத்தை குறுக்காக வெட்டிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் வாழைமரம் இருந்தது. அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ சாத்திரக்காரர் வந்து குருத்து எவ்வளவு நீளம் வளர்ந்திருக்கிறது என்பதை அளந்து குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கணித்து அப்படியே அந்த நேரத்துக்கு சாதகத்தை எழுதுவார்.

எங்கள் வீட்டில் பிள்ளை பிறந்த அடுத்த நாள் மணிக்கூடு போய்விடும். மூன்றாவது நாள் இரும்புக் கட்டிலை மடித்து  மாட்டுக்கொட்டிலுக்குள் ஐயா வைப்பார். அம்மா எழும்பி மெள்ள மெள்ள வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார். புதிதாக ஓர் ஏணை தொங்கும். வீட்டிலே இரண்டு ஏணைகள் ஒரே சமயத்தி;ல் தொங்குவது சர்வசாதாரணம். பிள்ளைகள் எல்லோரும் அடுத்தடுத்து பிறந்தார்கள். ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருட இடைவெளிதான். வேப்பெண்ணெய் விளக்கின் நெடி வீட்டை நிறைக்கும்.  31ம் நாள் துடக்கு கழிப்பார்கள். அதன் பிறகு அடுத்த குழந்தைக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும்.

எந்தச் சாத்திரகாரன் எங்கள் ஊரைத் தாண்டிப்போனாலும் எங்கள் வீட்டுக்கு வரத் தவறமாட்டான். பெட்டகத்துக்குள் கட்டி வைத்திருக்கும் சாதகக் கட்டை கொண்டுவந்து ஐயா அவனிடம் கொடுப்பார். அவன் சாதககங்களை அலசி கேட்பவர்களுக்கு திருப்தியீனம் வராமல் பலன் கூறுவான். எல்லாம் சொல்லி முடிந்த பிறகு அம்மா ஐயாவின் முகத்தை பார்ப்பார். ஐயா சொல்வார் 'மூத்தவனின் சாதகத்தை வடிவாய் பாருங்கோ. அவன் நீதிவானாக வருவானோ?' என்று நேரடியாகவே கேட்பார். சாத்திரக்காரன் மறுபடியும் சாதகத்தை புரட்டி கொப்பியின் பின் ஒற்றையில் சில கணக்குகள் போடுவான். 'என்ரை கண்ணிலே இது முதலில் தட்டுப்படாமல் போட்டுது. நான் பார்த்த சாதகங்களில் இப்படி புதன் உச்சமடைந்த சாதகத்தை காணவில்லை. புதன் கல்விக்கு அதிபதி. நிச்சயம் உங்கள் மகன் நீதிவான் ஆவான்' என்பான். அன்று சாத்திரக்காரனுக்கு ஆசார உபசாரங்களுடன் பெரிய விருந்து கிடைக்கும்..

இப்படி பல சாத்திரக்காரர்கள் வந்துபோனார்கள். எல்லோருக்கும் வாக்கு வல்லபம் இருந்தது. ஒருவராவது முந்தி சொன்ன சாத்திரக்காரரின் பலனை வெட்டிச் சொல்லாமல் ஒட்டியே சொன்னார்கள். இது அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் என்றே இன்று நினைக்கிறேன். ஒருமுறை பாதி ராத்திரியில் நான் கண் விழித்தபோது கண்ட காட்சி என்னை திடுக்கிடவைத்தது. பெரிய குங்குமப் பொட்டு வைத்து, சடைவிரித்த இளம் சாத்திரக்காரன் ஒருத்தன் குத்துவிளக்குக்கு முன்னால் உட்கார்ந்து சாதகக் கட்டுகளை ஆராய்ந்துகொண்டிருந்தான்.  ஐயாவின் வழுக்கை விழுந்த முன்னந்தலை கரப்பான் பூச்சி முதுகுபோல மினுங்கியது. அம்மா பாக்குத்தூளை முன்பல்லால் மென்றுகொண்டிருந்தார். வாடிய பூப்போல அவருடைய  தலை குனிந்திருந்தது. கை விரல்கள் வளைந்துபோய் அவர் கன்னத்தை தொட்டுக்கொண்டு இருந்தன. இருவரும் கிட்டத்தில் இருந்தாலும் பெரும் யோசனையில் தூரத்தில் இருந்தார்கள். 

'ராட்சதர்கள் பலம் பெறுவது இரவில். இரவு பிறக்கும் பிள்ளைகளில் ராட்சத குணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். கண்ணன் பிறந்தது இரவில். கண்ணனிடம் ராட்சத அம்சம் இருந்தபடியால்தான் அவனால் கம்சனைக் கொல்ல முடிந்தது. அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் ஏழு பிள்ளைகள் அடுத்தடுத்து இரவில் பிறந்திருக்கிறார்கள். வீட்டில் அளவுக்கதிகமாக ராட்சத அம்சம் கனத்துப்போய் கிடக்கிறது.'  பாட்டும் வசனமும் கலந்த மெல்லிய குரலில் இப்படிச் சொல்லிவிட்டு வலது கையை தூக்கி ஒரு பறவையை விடுதலை செய்வதுபோல விரித்தான்.

ஐயாவும் அம்மாவும் இதைக்கேட்டு இடிந்துபோய் விட்டார்கள். 'ஏதாவது பரிகாரம் உண்டா?' என நடுங்கியபடி ஐயா கேட்டார். 'பரிகாரம் பிறகு செய்யலாம். ஆனால் இன்னொரு குழந்தை இந்த வீட்டில் இரவு பிறக்கக்கூடாது. வீடு தாங்காது' என்று கட்டளையிடுவதுபோல சொன்னான். 'வேறு என்ன செய்யலாம்?' 'உங்கள் பிள்ளைகளில் ஒன்றிரண்டு பேர் வெளியே தங்கிப் படித்தால் நல்லது. அதனால் பெரிய நன்மை உண்டாகும்' என்றான். அப்படித்தான் என்னுடைய இரண்டாவது அண்ணர் மாமி வீட்டிலிருந்து படிக்கப் போனார். என்னை போர்டிங்கில் சேர்ப்பதாகச் சொன்னார்கள். நான் புறப்படுவதற்கு முதல்நாள் சமையலறைக்குள் போனபோது அம்மா விளக்குக்கு முன்னால் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார். என்ன என்னவென்று கேட்க அவர் பதில் பேசாமல் முந்தானையால் துடைத்தார். துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது, ஆனால் சத்தமே வரவில்லை. எங்கள் குடும்பம் ஒன்றாயிருந்தது அதுவே கடைசி.

சாத்திரி சொன்னதுபோல ராட்சதர்கள் வீட்டுக்குள் இருந்து வரவில்லை. வெளியே இருந்துதான் வந்தார்கள். அவர்கள் கால்களில் தடிப்பான தோல் பூட்சுகள் இருந்தன. வீடுகளும், வீதிகளும், விளையாட்டு மைதானங்களும் அமைதியாகின. வானமும் பூமியும் மாறின. ஒருநாள் வீட்டிலிருந்து ஓடிய வீமன் திரும்பவில்லை. என்னுடைய அண்ணர் என்னவானார் என்பதை பார்க்க ஐயாவும் அம்மாவும் உயிருடன் இருக்கவில்லை. இரவு நேரம் சைக்கிளில் விளக்கு வைக்காமல் ஓடி பொலீசில் பிடிபட்டு அண்ணர் இரண்டு தடவை கோர்ட்டுக்கு போகவேண்டி நேர்ந்தது. நீதிவானாகி வாழ்க்கைப்படிகளில் ஏறுவார் என்று சாத்திரக்காரரால் ஆருடம் சொல்லப்பட்ட அண்ணர் கோர்ட் வாசல் படிகளில் குற்றம் சாட்டப்பட்டுத்தான் ஏறினார். 

நான் ரொறொன்ரோவில் இருந்து இரவு நேரம் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இரவு நேரம் மனிதர்களுக்கு உகந்ததில்லை, ராட்சதர்களுக்கு உகந்தது அதனால் கெடுதல் உண்டு என ஐயாவும் அம்மாவும் பலதடவை சொல்லியிருக்கிறார்கள்.  எங்கே இரவு தொடங்குகிறது எங்கே முடிகிறது என்பதை எப்படி நான் கண்டுபிடிப்பது. இங்கே எனக்கு  நடு இரவு. கலிஃபோர்னியாவில் முன்னிரவு. இங்கிலாந்தில் பின்னிரவு. இலங்கையில் நாளையாகிவிட்டது.

ஐயா பத்திரமாகக் கட்டி பாதுகாத்த சாதகக் கட்டு ஞாபகத்துக்கு வருகிறது. எங்களுடைய சாதகங்கள் இரவல் மணிக்கூடு காட்டிய நேரப்படி கணித்து எழுதப்பட்டவை. சாதகத்தின் சொந்தக்காரர்கள் அவற்றை தொட்டது கிடையாது. அதை ஒருமுறையாவது பார்த்திருக்கலாம் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. இரவு நேரத்தில் ஒரே தாயின் வயிற்றில், ஒரே மருத்துவச்சியால் பிரசவம் பார்க்கப்பட்டு, ஒரே இரும்புக் கட்டிலில் நாங்கள் எல்லோரும் பிறந்திருந்தோம். திசைக்கு ஒருவராக சிதறி ஓடியபோது ஐயா பத்திரப்படுத்திய சாதகக் கட்டுக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. இன்று நாங்கள்  வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு துயரங்களுடன் வசிக்கிறோம். சில தேசிக்காய்கள் வேகம் பிடித்து எல்லைக்கு அப்பால் ஒடின. சில உரிய இடத்தில் வந்து நின்றன. சில கதவை தாண்டவே இல்லை.

Like what you read? Help WWB bring you the best new writing from around the world.