Skip to content
Give readers a window on the world. Click to donate.
from the April 2015 issue

நிஜமும் பொய்யும்

1

ராகவன் ஒரு சூட்கேசுடன் ரயில் பெட்டிக்குள் ஏறினான். இடது கையில் வைத்திருந்த பயணச் சீட்டை ஒரு முறை பார்த்தான். பிறகு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி வந்தான். பெட்டிகள் வைப்பதற்கென்று இருந்த இடத்தில் சூட்கேசை வைத்து விட்டுத் தனக்குரிய இடத்தில் உட்கார்ந்துகொண்டான். தலையைத் தூக்கி அந்தப் பெட்டி முழுவதும் பார்த்தான். ஏழெட்டு பேர் மட்டுமே உட்கார்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆட்கள் குறைவாக இருப்பதே அவனுக்குச் சலிப்பை உண்டாக்கிற்று. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். நடைபாதையில் குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. கூட்டம் அதிகமில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். ரயில் புறப்படுவதற்கு இன்னும் நேரம் இருப்பது தெரிந்தது,  இவ்வளவு முன்னதாக வந்திருக்க வேண்டாம் என்று நினைத்தான். நடைபாதையில் போவதும் வருவதுமாக இருந்த கூட்டத்தை மீண்டும் பார்க்க ஆரம்பித்தவனின் கண்ணில் எதிரில் தபால் பெட்டி தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. தபால் பெட்டி யையே பார்த்துக்கொண்டிருந்தவன், சட்டென்று எழுந்து சூட்கேசைக் கீழே இறக்கி, மடியில் வைத்துக்கொண்டு சூட்கேசை மூடி, அதன்மீது நோட்டை வைத்து எழுத ஆரம்பித்தான்.

‘அன்புள்ள அம்மாவுக்கு ராகவன் எழுதிக்கொண்டது. இங்கு நான் நல்லமுறையில் இருக்கிறேன். காய்ச்சல், தலைவலி என்று உடம்புக்கு ஒன்றுமில்லை. நீ எப்படி இருக்கிறாய்? உடம்புக்கு ஒன்றுமில்லையே. மூன்று, நான்கு மாதங்களாகக் கடிதம் போடவில்லை என்று நீ வருத்தப்பட்டு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. எழுத வேண்டுமென்று தினமும்தான் நினைக்கிறேன். கடிதம் எழுத நேரமே கிடைக்கவில்லை. காலையில் கம்பெனிக்குப் போனால் திரும்பி வர ராத்திரியாகிவிடுகிறது. ரூமுக்கு வந்த மறு நிமிசமே படுத்தால் போதுமென்றிருக்கிறது. மீறி எழுதலாம் என்றாலும், இங்கு போனில் பேசிப்பேசியே பழக்கமாகிவிட்டதால் எழுதுகிற பழக்கமே போய்விட்டது. எழுதுவதற்குக் கைவர மாட்டேனென்கிறது. அதோடு, இரண்டு மூன்று மாதமாகவே கம்பெனியில் ஒரே பிரச்சினை. ஆள்குறைப்பு செய்ததற்காகப் போராட்டம், ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்துகொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. இதனால்தான் அப்பாவோட திவசத்திற்கும், மகத்தில் அரிசி கொடுப்பதற்கும் வர முடியவில்லை. முக்கியமாக, கம்பெனியில் லீவே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மீறிப் போனால் அதையே காரணமாக வைத்து வெளியே தள்ளிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இதென்ன கவர்மண்ட் வேலையா, நம் இஷ்டத்திற்குப் போக, வர? தனியார் வேலை என்றால் பலதும் இருக்கும்தான். இதையெல்லாம் நினைத்து நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்’ என்று எழுதிவிட்டு, எழுதியதை ஒரு முறை படித்துப்பார்த்தான். பிறகு கைக்கடி காரத்தைப் பார்த்தான். நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகக் கிறுக்க ஆரம்பித்தான். ‘குழம்புச் செலவுக்கு எங்கப் போவன்னு சொல்லிக்கிட்டு பண்ணக் கீரய, பசலக்கீரய, புளிச்சக்கீரய கடஞ்சி தின்னுக்கிட்டுதான் கிடக்குறியா? ஒண்ணும் செலவு ஆயிடாது. நெல் சோறு ஆக்கி நல்ல குழம்பா வச்சி சாப்புடு. கத்திரிக்காயெ வாங்காத. செட்டிக் கடயில கூறுகட்டி வச்சியிருக்கிற சொத்தெக் கத்திரிக்காயே வாங்கித்தொலைக்காத. நான் இங்க மூணு வேளையும் நெல் சோறுதான் சாப்புடுறன். காசு போட்டாலும் மெட்ராசில சோளச் சோறு கிடைக்காது, தெரிஞ்சிக்க. போன மாசத்துக்கு முந்தின மாசம் அனுப்புன பணத்தில சோத்துக்கு வாங்காம ‘பேரன் பொறந்தா வெள்ளி அர்ணாக்கொடி வேணுமே’ன்னு எடுத்து வச்சியிருக்கியாமே. இன்னம் கல்யாணமே நடக்கல. அதுக்குள்ளார கொடிக்கென்ன அவசரம்? இன்னும் செட்டிக் கடயிலபோயி ஓசி வெத்தல, பிசுக்கு வெத்தலக்கிக் கையேந்திகிட்டுத்தான் நிக்குறியா? காசுபோட்டு வெத்தல வாங்கு. என்னோட மானத்த வாங்காத. எழுதினா அவன் பாட்டுக்கும் எழுதிக்கிட்டு இருக்கட்டும், எனக்கு என்னான்னு சொன்னியாமே. திட்டக்குடி செட்டி என்னப் பத்தி என்னா நெனைப்பான்?’

‘எல்லாத்தையும்விட முக்கியமா ஊர்ல இருக்கிற முறைக்காரப் பொண்ணுங்ககிட்டப் போயி ‘எம்மவன கட்டிக்கிறியா’ன்னு கேக்குறியாமே. இது உனக்குத் தேவையா? அதோட ஒண்ணு, ரெண்டு பேரோட ஜாதகத்த எல்லாம் வாங்கிப் பொருத்தம் பாத்தியாமே. கொஞ்ச நாளக்கிப் பேசாம இரு. இந்த ஜாதகம் பாக்கிறது, பொருத்தம் பாக்குறத எல்லாம் நிறுத்திவை. வீட்டுக்குள்ளார கோழி வந்தது, ஆடு வந்ததுன்னு சொல்லி அக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட எல்லாம் சண்ட வாங்கிக்கிட்டு இருக்காத. ஒரு சண்டயில பக்கத்து வீட்டுக்காரன் ‘வேலயில இருந்தா உம் மவன் என்ன பெரிய இவனா?’ன்னு கேட்டானாமே. நீ அவன்கிட்ட வாயக் கொடுக்காத. நான் வந்து பேசிக்கிறேன். வீட்டுல இருக்கிற எல்லாக் கோழிங்களையும் வித்துத் தொலச்சிடு. கல்யாணச் செலவுக்கு வேணுமின்னு வளத்துக்கிட்டிருக்கிற கால் உருப்படி ஆடுவுளையும் சந்தக்கி ஓட்டிக்கிட்டுப் போயி தள்ளி வுட்டுடு. நிம்மதியா இருக்கக் கத்துக்க.’

‘அடுப்புக்கட்டிக்கி நேரா ஒழுகுதுன்னு எழுதியிருந்தியே, அது என்னாச்சி? அதில் செத்தயகித்தயப் போட்டு அடச்சியா? இல்லன்னா, மேய்ச்சக்கார மாமன்கிட்ட நான் சொன்னன்னு சொல்லிக் கூட்டியாந்து ஒழுகுற எடத்துலெ செத்தயப் போட்டு அடெ. ஊருக்கு வர்றப்போ அவருக்கு நான் சாராயம் வாங்கிப் போடுறன்னு சொல்லு. ஊர்ல வேற என்னா விசயம்? மழை எதாவது பெஞ்சுதா? போன வருசம் மாதிரி இந்த வருசமும் ஆச்சாம்போச்சாம் மழைதானா? சாமிக்கு எப்போது காப்புக் கட்டுறாங்க? திருவிழா போட்டா என்னோட பேர்ல ஒரு மல்லு வேட்டியும் மாலையும் வாங்கிப் போடு. வரி கேட்டா கொடுத்துடு. கம்மனாட்டி கயிசரகிட்ட வந்து வரி கேக்குறீங்களேன்னு சண்டக்கிப் போவாத.’

‘வேல கிடச்சி என் கைக்குப் பணம் வந்ததும் உன்ன மறந்துட்டன்னு எப்பவும்போல போன லெட்டர்லயும் எழுதியிருக்க. நான் ஒண்ணயும் மறக்கல. நான் செத்தாதான் நம்ப பழய கதயெல்லாம் மறக்கும். அப்பா செத்துக்கிடந்தப்ப பிணத்துக்கு வழி விடக்கூட ஒருத்தரும் வரல. எழவு சொல்லக்கூட யாரும் போவலங்கிறத மறந்துட முடியுமா? தண்ணீ எடுக்கப் போன சாந்தியோட சடயப் புடிச்சி இழுத்தேன்னு சொல்லி மாரியாயி கோவில் முன்னால என்ன நிக்கவச்சி

அபராதம் போட்டப்ப ‘இந்தத் தடவ மன்னிப்பு தாங்கன்னு பஞ்சாயத்தில வியிந்துவியிந்து நீ கும்புட்டதயும் பாக்காம போனாங்களே, அத மறக்கச் சொல்லுறியா? எத நான் மறப்பன்? நான் பத்தாவது படிக் கறப்போ வந்த தீபாவளிக்குக் கறி எடுக்கப் பணமில்லாம, கடனுக்கும் கறி எடுக்க முடியாம இருந்த. கேட்டவங்ககிட்ட எல்லாம் வெள்ளிக்கிழமை எப்பிடிக் கவுச்சி ஆக்குறதுன்னுதான் கறி எடுக்கலன்னு நீ சொல்வ. ஆனா அந்தப் பயதான் வெம்மாறிப் போவான்னு சொல்லித் தெருவுல ஒவ்வொரு வீடா சொல்லிக்கிட்டே போயி, ஒவ்வொரு வீட்டிலயும் கறிக் குழம்பு வாங்கியாந்து ஒரு சட்டிக் கொழம்பு சேத்து, மூணு நாளு சூடுபண்ணி, சூடுபண்ணி எனக்கு மட்டும் போட்ட. நான் எதயும் மறக்கல, எல்லாம் மனசுல இருக்கு.’

‘இப்ப நான் எழுதப்போற விசயத்த அவசரப்பட்டு ஊருல யாருகிட்டயும் சொல்ல வேணாம். நான் வேல பாக்குற கம்பெனியில எங்கூட வேலபாக்குற ஒருத்தரோட பொண்ணு காலெஜ்வர படிச்சிட்டு இப்ப எங்க கம்பெனியிலதான் வேலக்கி சேந்திருக்கு, அந்தப் பொண்ண என்னெக் கட்டிக்கச் சொல்றாங்க. ஒண்ணும் அவசரமில்ல, நீ வந்து பொண்ணப் பாத்த பெறவு மத்த விசயங்களைப் பேசிக்கலாம். இதை ஏன் எழுதுறேன்னா, இன்னிக்கி மெட்ராசில ஒரு ஆள் சம்பளத்த வச்சிக்கிட்டுக் காலத்த ஓட்ட முடியாது. ஒண்ணுக்குப் போவனுமின்னாக்கூட இங்கக் காசு வேணும். பச்சத் தண்ணீயக்கூட இப்ப காசு போட்டுதான் வாங்கிக் குடிக்கிறாங்க. நம்ப ஊருல விக்கிற ஒரு லிட்டரு பசும்பாலக்காட்டிலும் மெட்ராசில தண்ணீ வெலை அதிகம்’ என்று எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் வந்து உட்கார்ந்து கொண்டு ராகவனையும் இடம்மாறி உட்காரச் சொன்னார்கள். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிட நேரம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். தொடர்ந்து கடிதத்தை எழுத முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தலையைத் தூக்கிப் பார்த்தான் அந்தப் பெட்டிக்குள் ஒரே கூட்டமாகவும் இரைச்சலாகவும் இருந்தது. குழம்பிப் போனவன், கடிதத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்று அவசரஅவசரமாக எழுத ஆரம்பித்தான்.

‘திடீரென்று என்னை பம்பாயில் இருக்கிற கம்பெனிக்கு மாற்றிவிட்டார்கள். இந்த லெட்டரைக் கூட ரயிலில் உட்கார்ந்துகொண்டுதான் எழுதுகிறேன். நான் பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்ததும் உனக்கு லெட்டர் எழுதுகிறேன்’ என்று எழுதி முடித்தவன், தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த தடித்த ஆளை ஓரக்கண்ணால் பார்த்தான். மேலும் ஒடுங்கிய நிலையில் சன்னலோரமாக நகர்ந்து உட்கார்ந்து, எழுதியதை ஒரு முறை படித்துப்பார்த்தான். சூட்கேசைத் திறந்து கவரை எடுத்துக் கடிதத்தை மடித்து உள்ளே போட்டு ஒட்டப்போனவன், மீண்டும் கடிதத்தை எடுத்துப் படித்தான். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ, அதை அப்படியே மடித்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு நோட்டில் மற்றொரு தாளைக் கிழித்து மீண்டும் எழுத ஆரம்பித்தான்.

‘அன்புள்ள அம்மாவுக்கு ராகவன் எழுதிக்கொண்டது. திடீரென்று என்னை பம்பாய்க்கு மாற்றி விட்டார்கள். இன்று நான் பம்பாய்க்குப் போய்க்கொண்டிருக்கிறேன். போன பிறகு என்ன ஏதென்று தெரிந்துகொண்டு எழுதுகிறேன். இனி நீ மெட்ராஸ் அட்ரசுக்குக் கடிதம் எழுத வேண்டாம்’ என்று சரசரவென்று எழுதிமுடித்துவிட்டு, எழுதிய வேகத்திலேயே திரும்பிக்கூடப் படித்துப்பார்க்காமல் மடித்து கவருக்குள் போட்டு நாக்கில் தடவி கவரை ஒட்டினான். சூட்கேசைத் தூக்கி மேலே வைத்தான், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் சூட்கேசைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரயில் பெட்டியை விட்டுக் கீழே இறங்கித் தபால் பெட்டி தொங்கிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.

2

‘நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்.’

‘நீ விசயத்தைப் பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும் எயிதிப்புட்டு படிச்சிக்காட்டுறன். ஏதாச்சும் வுட்டுப்போயிருந்தா படிச்சிக்காட்டறப்போ சொல்லு, சேத்து எயிதிப்புடுறன்.’

‘இல்லெ தம்பி. மொதல்லெ ‘என்னோட ஆச மவனுக்கு, ஒன்னோட அம்மா எயிதிக்கொண்டது, நான் ஊருலே நல்ல சொவமா இருக்கன். அங்கே ஒன்னோட சொவம் எப்பிடி, ஒடம்பு எப்பிடி’ன்னு எயிதுவ இல்லெ? அதெ எயிதிப்புடு. நான் பொறத்தாலெ சொல்றன்.’

எதிரில் பித்துக்குளி மாதிரி உட்கார்ந்திருந்த மொட்டையம்மாளை வெறுப்புடன் பார்த்த சேகர்,  கீழே கிடந்த காலண்டர் அட்டையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, அதன்மீது நான்கு பக்கம் கொண்ட வெள்ளை முழுக் காகிதத்தை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தான். ஆர்வம் பொங்க அவன் எழுதுவதையே அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி உண்டாயிற்று. இரண்டு வரிகளை எழுதி முடித்த சேகர், தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே அசட்டையாக ‘சொல்லு’ என்றான்.

‘நான் சொல்லுறத செத்தெ ஒண்ணு வுடாம எயிது சாமி. ஒனக்குப் புண்ணியமா இருக்கும்.’

‘சொல்லு.’

‘நடுப்புற நடுப்புற வுட்டுட்டு எயிதிப்புடாத.’

‘இதனாலதான் மனுசனுக்கு வேகோலம் வரது. எத்தனெ வாட்டி ஒனக்கு நான் லெட்டர் எயிதிருப்பன்? ஒரு வாட்டியாச்சும் அப்பிடி செஞ்சியிருக்கனா?’

‘கோவிச்சுக்காதடா தம்பி. வுட்டுப்போயிடக் கூடாது பாரு, அதுக்காவச் சொன்னேன். ஒன்னெக்

குத்தம் சொல்லலெ.’

‘சீக்கிரம் சொல்லு, கட்டு எடுத்துடுவாங்க. திருநாச் செலவுக்கு ஐநூறு கேட்டதயும் மறந்துப்புடாத.’

‘என்னாத்தெ சொல்லுறது? மனங்கெட்ட கேடு, நான் சொல்லுறன். ‘நான் நல்ல சொவமா இருக்கன். நீ எப்பிடி இருக்கன்னு எனக்கு ஒரு சேதிபாதியும் தெரியலெ. மெட்ராசியிலெ இருந்து வந்த நம்ம ஊரு ஆளுவளும் ரெண்டு மூணு மாசமா ஒன்னெக் கண்ணாலக் கண்டதில்லன்னு சொல்றாங்க. அதனால எனக்கு ராத்தூக்கமில்லெ. இப்பிடி இருக்கன், அப்பிடி இருக்கன்னுகூடமா எயிதக் கூடாது? அதிலியா காசி செலவாப்பூடும்? ஒங்கிட்டேயிருந்து ஒரு நமோதும் இல்லங்கிற கொறதான் எனக்கு. மத்தது ஒண்ணுமில்லெ’ என்று சொன்ன மொட்டையம்மாள் எழுதாமல் உட்கார்ந்துகொண்டிருந்த சேகரைச் சந்தேகமாகப் பார்த்தாள். எதுவுமில்லை என்பதுபோல் சாதாரணமாக, ‘மேக்கொண்டு சொல்றதயும் சொல்லிப்புடு. மொத்தமா எயிதிப்புடுறன்’ என்று அவன் சொன்னான். அதற்கு அவள் கெஞ்சுவது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, உடைந்துபோன குரலில் ‘தவறிப்போவும் தம்பி. செத்த சொல்லச்சொல்ல எயிதிப்புடன்’ என்று சொல்லிக் கட்டாயப்படுத்த ஆரம்பித்ததும் சேகருக்கு வேறு வழியின்றிப்போயிற்று. வேகவேகமாக இரண்டு மூன்று வரிகளை எழுதிவிட்டு வெறுப்புடன் ‘அப்புறம்?’ என்று கேட்டான்.

‘அப்பாவோட தெவசத்துக்கு நீ ஏன் வல்லெ? மகத்துலெ பொட்டச்சி அரிசி கொடுக்கக் கூடாது,  நீதான் வரணும்ன்னு எத்தன வாட்டி ஒனக்கு எயிதிப் போட்டன்? பெத்தவனுக்காக ஒன்னாலே ஒரு நாளு மெனக்கிட முடியலெ. அம்மாம் பெரிய வேலெயா, நீ பாக்குற வேலெ? நாளக்கி நான் செத்தாலும் நீ இப்படித்தானெ செய்வ? நான் ஒரு ஆத்துமா இருந்ததாலெ இன்னிக்கி காரியம் முடிஞ்சிபோச்சி. இல்லன்னா என்னா ஆவும்? மகத்துலெ அரிசி கொடுக்கிறது, பாப்பான்கிட்டெ நம்ப கருமத்தெத் தொலக்கத்தான். இதுகூடத் தெரியாம என்னா படுப்பு படிச்செ? இதுக்கு மெட்ராசியிலெ வேற வேலெ பாக்குறவன்’ என்று சொல்லிவிட்டு சேகர் முகத்தைப் பார்த்தாள். அவன் எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதி முடிக்கும்வரை பேசாமல் இருந்துவிட்டு, அவன் எழுதி முடித்தது தெரிந்ததும் தானாகவே சொல்ல ஆரம்பித்தாள்.

‘நேத்துத்தான் நம்ப ஊரு சாமிக்கிக் காப்புக் கட்டுனாங்க. முடிஞ்சா நாலு, அஞ்சி நாளு இருக்கிற மாரி வா. முடியாட்டி தேர் போடுற அன்னிக்காச்சும் வா. ஊருலெ தேரும் திருநாளுமா இருக்கிறப்ப, சொந்தம் பந்தமின்னு மக்கெ மனுச ஒண்ணாக் கூடுற நாளயிலே நீ வல்லன்னா எம் மனசு என்னா பாடு படும்? ஊரு சனங்கதான் ஒனக்கு வாண்டாம். சாமிகூடமா வாண்டாம்? ஊருலெ இருக்கிறவங்க எல்லாரும் சத்ராவிங்கதான். அதுக்காக ஊர வுட்டா ஓடிட முடியும்?’ என்று சொன்னவள், சேகரைப் பார்த்தாள். அவன் எழுத ஆரம்பித்தான்.

‘ஊட்டோட மேக்காலெ பக்க செவுரு சரிஞ்சிக் கிட்டு நிக்குது. முட்டுக் கயி கொடுத்திருக்கன். விட்டமும் லேசா மக்குனாப்லெ இருக்கு. பயய காலத்து ஊடு. ஊட்ட மேஞ்சா தேவலாம். இந்த வருசக் கோடக் காத்துக்குத் தாங்காது. நான் ஆம்பளயா, நாலு எடத்துக்கு ஓடி நாலு பேரக் கொண்டாந்து வேலெய முடிக்க? ஊட்டுலெ கைய வச்சா வல்லிசா ரெண்டாயிரமாவது புடிக்கும். நான் கெய்வி. என்னாலெ என்னா முடியும்? ஆளு இல்லாதவன் பொயப்பு அர பொயப்புதான்.

‘காசிய மிச்சப்படுத்தறன்னு சொல்லி வவுத்தக் கட்டாத. புடிச்சா பாரு, இல்லன்னா வந்துடு. வேலெ போனா செருப்பாச்சி. ஒப்பன், பாட்டனெல்லாம் காட்டு வேலெ செஞ்சி இந்த ஊருலெ பொயிக்கிலியா? செத்தாப்போயிட்டாங்க? வவுத்தக் காயப்போட்டு சம்பாரிச்சி என்னா செய்யப்போற? அப்பிடித்தான் மெத்த மாளி கட்டலாமின்னா அப்பிடிப்பட்ட மெத்த மாளி நம்பளுக்கு வாண்டாம். நல்லா சாப்புடு. வவுத்துக்கு வஞ்சன வெக்காதெ. ஒடம்ப எளக்க வுடாத. ஒடம்புதான் சொத்து. அது இருந்தா நாலு எடத்துக்கு ஓடிப் போயி பொயிச்சிக்கலாம். காசி பத்தலன்னா சொல்லு, இங்க இருக்கிற ரெண்டு பயிர் ஆட்டெயும் வித்து அனுப்புறன்.

‘சொல்ல மறந்துட்டன் பாரு. போன ஒரு மாசத்திலியே ஒண்ணு வுட்டு ஒண்ணுன்னு மூணு ஆடுவோ குட்டிப் போட்டிச்சி. அதுலெ மூணு கொறா, ரெண்டு கெடா. ஒரு ஆடு மட்டும் சாவுக் குட்டியாப் போச்சி. அதுவோதான் இப்ப என்னெப் புள்ளிவுளாட்டம் சுத்திச்சுத்தி வருதுவோ. குடும்பத்தோட குல தெய்வத்துக்கு மொட்டபோட்டுப் பூசப்போடுறன், ஒரு குட்டி கொடுன்னு ஒரு குடித்தெரு ஆளு வந்து கேட்டான், முடியாதுன்னுட்டன். எயிதறியா தம்பி?’

‘எயிதிக்கிட்டுத்தான் இருக்கன், சொல்லு.’

‘எம் மவனுக்கு ஒரு கண்ணாலம் காச்சி நடக்கலியேன்னு சொல்லி நம்ப பொயனப்பாடி ஆண்டவர் கோவுலுக்கு ரெண்டு மூணு வரிசத்துக்கு மின்னாடி ஒரு கெடாவ நேந்துவுட்டன். அது இப்ப என்னடான்னா மாடாட்டம் வளந்துபோயி நிக்குது. பாக்குற சனமெல்லாம் வித்துதப்புடுன்னு சொல்லுதுவோ. நானு வாய் பேச முடியாம கெடக்குறன். ஆட்டே கொண்டுபோயி கோவுல்லெ வுட்டுடலாமின்னு இருக்கிறன். நீ என்னா சொல்ற?’

சேகர் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மொட்டையம்மாள், ‘என்னா தம்பி என்னியே பாக்குற? நான் சொல்றத எல்லாம் ஊகமா எயிதறியா?’ என்று லேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

‘எயிதிகிட்டுத்தான் வரன். மேலெ சொல்லு... நான் கேட்ட ஐநூறு எப்ப கெடெக்கும்?’ என்றான் சேகர்.

‘ஒனக்கு இல்லாமியா?’ என்றவள், கசந்துபோன குரலில் சொன்னாள், ‘ஒரு காச்ச, தலவலின்னாகூட கேக்கறதுக்கு நாதி பிராதி கெடயாது. தனிப் பொணமா கெடக்குறன். நான் இன்னிக்கி செத்தன்னா எம் பொணத்தோட தலமோட்டுலெ குந்தி அயுவறதுக்கு ஒரு ஆளு இல்லெ. பொட்டெப் புள்ளையா இருந்தாலும் நான் செத்தாக்கா ஐயோ என்னெ பெத்த தாயாரேன்னு சொல்லி மாரடிச்சிக்கிட்டு அயுவும். எனக்கு அந்தக் கொடுப்பன இல்லெ. தாலி கட்டிக்கிட்டு ஒங்கப்பன்காரன் கூட வந்ததுலேருந்து எனக்கு எந்தக் கொடுப்பனதான் இருந்துச்சு? அதுக்குத்தான் சொல்றன், என் மூச்சிருக்கயிலே ஒரு குட்டிக்கி தாலியக் கட்டிக் கொண்டாந்துடு. ஒப்பன் பேர சொல்லலன்னாலும் ஒம் பேர சொல்லவாச்சும் ஒரு நாதி வாணாமா? எம்மாங் காலத்துக்கு இப்பிடி? ஒரு நாளக்காச்சும் ஊரு நாடுன்னு வந்து சேர வாணாமா? ஆடு திருடற, மாடு திருடற ஊரா இருந்தாலும் நம்பளுக்கின்னு நாலு மக்கெ மனுச இல்லாமியா போயிடுவாங்க? ஆதியிலெ நடந்ததியே நெனச்சிக்கிட்டிருந்தா முடியுமா? மருந்த முயிங்குறாப்ல போவணும். இல்லாட்டி நாளு ஓடாது. ஊருன்னு இருந்தா நாலு விதமாத்தான் இருக்கும். மின்னாலெ ஒண்ணும், பின்னாலெ ஒண்ணும், சொல்வாங்கதான் சனங்கன்னு இருந்தா இப்பிடித்தான். காது கேக்கல, கண்ணு பாக்கலென்னு நாமதான் ஒதுங்கிக் கால சீவனத்த ஓட்டிக்கிட்டுப் போவணும். யாரப் பாத்தாலும் ஒங்களெப் போல உண்டான்னுட்டுப் போவணும். தண்ணீக்கிப் போன சாந்தி குட்டியோட சடய நீ புடிச்சி இயித்தன்னு சொல்லி நாலு குள்ளேறிப் பயலுவோ பஞ்சாயத்து கூட்டுனதுக்கு ஊரு என்னாப் பண்ணும்? ஊருலெ இருக்கிற நாலு நாதேறிவோ கட்டிவச்ச கங்காட்சியாலெ இன்னா பொயிதின்னு இல்லாம, ராவோட ராவா ஊட்ட வுட்டுப் போன புள்ளெய ஒரு வரிசமா காணலியேன்னு எங் கட்டெ காத்தாப் பறக்குது. ஒரு வேளெக்கி மறுவேளெ சோத்தக் கண்டா ‘ஆ’ன்னு அமுட்டிக்கிட்டு வருது. ராத்திரியிலெ கண்ணெ மூட முடியலெ. ராவும் பவலும் ஒங் கவலெதான் எனக்கு. புள்ளெ இந்நாரம் எங்கெ நிக்குதோ, சோறுதண்ணீ குடிச்சிச்சோ இல்லியோன்னு எங்கொல பதறிப்போவுது. நீ என்னெப் பத்தி ஒண்ணும் நெனக்காத. காடு வா வாங்குது, ஊடு போ போங்குது. இனிமே என்னா கெடக்கு? இருந்த முட்டும் இருந்தோம் வேளெ வந்தா போவ வேண்டியதுதானெ. முடியாது இன்னா முடியுமா? காய பூவத் தின்னு இனுமே எத்தன காலத்துக்கு சம்பத்தா வாயிந்திடப்போறன். அதனால என்னெ நெனச்சிக்கிட்டு நீ மனசத் தளர வுடாத.’ மொட்டையம்மாள் பேசுவதை நிறுத்திவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள். சேகர் எழுதுகிறானா, இல்லையா என்றுகூட அவள் பார்க்கவில்லை. ‘அப்பறம்... அப்பறம்’ என்று சேகர் கேட்ட பிறகுதான் தலையைத் தூக்கிப் பார்த்தாள். முந்தானையால் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு கம்மலான குரலில் தொடர்ந்தாள்.

‘செத்துப்போன ஒப்பங்காரன் நாள் தவறாம எஞ் சொப்பனத்திலெ வந்துட்டு வந்துட்டுப் போறான். செத்தவங்க சொப்பனத்திலெ வர்றது குடும்பத்துக்கு நல்லதில்லெ. குடும்பத்துக்கு ஆவாது. குடும்பம் விருத்திக்கி வராது. நம் குடும்பத்திலெ என்னா இருக்கு, யார் இருக்கான்னு சொல்லி நீ யோசிக்காத. நான் கெய்வி. நான் சுடுகாட்டுக்குப் போவலாம். ஒன்னெ நெனச்சாத்தான் எம் மனசு ஆற மாட்டங்குது. அதனால் சட்டு சடுக்குன்னு ஒரு குட்டியப் பாத்து முடிச்சிடலாமின்னு இருக்கன். ஒனக்குன்னு ஒருத்தி வந்துட்டா எங் கவல வுட்டுடும். எங் கட்ட சீக்கிரமா மசானக்கரயிலெ வெந்துடும். மனக்கொறயோட ஆவியா அலயாது. எனக்கு என்னா இருக்கு? ஆனமுட்டும் பாக்குறன், ஆவாட்டி சாவறன். ஒரு கவலயுமில்லெ. பாலு குடிக்கிற புள்ளெய வுட்டுட்டு சாவறமேன்னு கவலயா, இல்லெ நண்டும்சிண்டுமா இருக்கிற புள்ளிவுளெ வுட்டுட்டு சாவறேன்னு கவலயா? ஒண்ணும் கெடயாது. சாவு வல்லியேங்கிற கவலதான். அது ஒண்ணுதான் மனக் கொறயா இருக்கு... என்ன, எயிதிகிட்டு வரியா தம்பி?’

‘பின்னே, கொஞ்சம் பொறுமயா சொல்லு.’

‘எம் மனசுல இருக்கிற கொறயெல்லாம் சொன்னா எயிதுறதுக்கு இந்த மாரி ரெண்டு மாட்டு வண்டி காயிதம் பத்தாது. என்னாப் பண்றது? சரி, நீ எயிது.’

‘எம் மனசுல ஒரு கோரிக்கப் பண்ணிக்கிட்டு இருக்கன். அது சரிவந்தா சொல்லு, இல்லன்னா வுட்டுடு. நம்ப ஊருலெ இருக்கிறானே கஞ்சிகாச்சி, அவனோட பெரிய மவன் மூக்கன் இருக்கானில்லே, அவனுக்கு நாலும் பொட்டெ. அதுலெ மூணு குட்டிக்கிக் கண்ணாலமாயிப் போயிட்டாளுவ, கடேசி குட்டி இருக்கிறா. அவ பேரு என்னா தம்பி?, ம், வனமயிலு. பாக்குறதுக்கு வள்ள மாட்டம் இருந்தாலும் பதக்க மாட்டம் இருப்பா. நம்ப ஊருலெ அவ ஒருத்தித்தான் எடுப்பா கண்ணுக்குப் பொருத்தமா இருக்கிறா. வெகு நாளா மனசிலெ ஆச இருந்தாலும் போன எட்டாம் நாளுதான் கேட்டன். ஆட்டுக்குத் தவ ஒடிக்க வந்தவ கிட்டெ ‘சம்மதமாடி’ன்னு நேராவே கேட்டன். படிச்சவரு. மெட்ராசிலெ வேலெபாக்குறவருக்கு கள வெட்டுற, கரும்புக் கட்டு தூக்குற என்னெயெல்லாம் புடிக்குமான்னு திலுப்பிக் கேட்டுப்புட்டா. என்னாலெ வதுலு பேச முடியலெ. அவ மனசிலயும் ஆச இருக்கு மாட்டம் இருக்கு. அவ ருதுவான சாதகத்தையும் ஒன்னோட சாதகத்தயும் போட்டுப் பாத்தன். இந்த மாரி சாதகப் பொருத்தம் நூத்திலெ ஒண்ணுதான் அமயுமின்னு அய்யரு அடிச்சிச் சொல்றான். எல்லாப் பொருத்தத்தயும்விட மொகப் பொருத்தம் இருந்தா சரிதான். மொக வாட்டமான குட்டிதான் அவ.

‘உள்ளூர்னா பாடுனாலும் பேசுனாலும் எடுத்து வச்சிப் பாக்கும். நான் நாளக்கி செத்தா நாலு சனம் கூட்டமா வந்து எம் பொணத்தெ எடுத்துப்போடும். இந்த ஊருலெ நம்பிளுக்குன்னு நாலு சனம் வாணாமா? பெரிய கூட்டமுள்ள குடும்பம் அது. மேக்காலத் தெருவே அவ கூட்டம்தான். காசி ஆப்புடுதின்னு பட்டணத்தோட போயிட முடியுமா? பட்டணத்துக்காரனுவோ பகரா வெள்ளச் சட்டத்தான் போட்டிருப்பானுவோ. நெயலு வாட்டத்திலே குந்தி இருக்கிறதாலெ பொட்டச்சிவுளும் கொஞ்சம் வெளுப்பாத்தான் இருப்பாளுவோ. மத்தது ஒண்ணுமில்லே. ரெண்டு நாளக்கி ஆடுவோகூட நடந்தாளுவோன்னா கூர மேலெ காயப் போட்ட கருவாடு மாரி ஆயிப் போயிடுவாளுவோ. நான் சொல்லுறது நெசம்தான். வெளுத்தத் தோலுக்காகப் பொண்ணு கட்ட முடியுமா? காசி பணம் என்னா செய்யும்? சனங்களெ சம்பாரிக்கிறதுதான் கஷ்டம். நாளக்கி நான் செத்தா காசி பணமா வந்து மாரடிச்சி அயிவப்போவுது? உத்தெ மனுசாள்தான் ரெண்டு சொட்டுக் கண்ணு தண்ணீ வுடும். காசிப் பணம் நம்பளுக்கு வாணாம். காசிப் பணத்தப் பாத்தா நான் ஒங்கப்பனுக்குப் புள்ளெ பெத்தன்? காசிப் பணம் இருந்தா ஊரு மெச்சத் துணி கட்டலாம், நாலு நகயப் போட்டுப் பாக்கலாம். வேறென்ன? எல்லா ஆட்டமும் இந்தக் கட்டயிலெ உசுரு இருக்க மட்டும்தான? அப்புறம் ஒண்ணும் இல்லெ.

‘காசிப் பணத்துக்கு ஆசப்பட்டா ஒன்னெப் படிக்க வச்சன்? அப்பிடி இருந்தா அப்பறமென்ன? நீ எட்டாவதோ ஒம்பதாவதோ படிக்கிறப்ப, ஒப்பன் காயிலாவுல கெடந்தப்ப, ஒங்க பெரியப்பங்காரன் வந்து இனிமே பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வாணாம். எங்கூட அனுப்பு, மோளம் கத்துக்கிட்டான்னா ரெண்டு

காசி வரும்ன்னு சொல்லி ஒங் கையப் புடிச்சி அயிச்சிக்கிட்டுப் போனான். ஒப்பன்காரன் மரமாட்டம் பாத்துக்கிட்டு நின்னான். அண்ணங்காரனெ எதுத்துப் பேச அவனுக்கு வாய் வல்லெ. ‘என்னடா இது, நம்ப வச்சியிருக்கிறதே ஒரு புள்ளெ, அதெயும் மோளமடிக்கக் கூப்புட்டுக்கிட்டுப் போறன்னு போறானேன்’னு சொல்லி, பாதி தெருவுக்கு ஓட்டமா ஓடிப்போயி ஒங்க பெரியப்பங்காரன் கால்ல வியிந்து கும்புட்டு, ‘எம் புள்ளெய வுட்டுடு, அது செத்தாலும் சாவட்டும், இந்த வயிசியிலே ஒயச்சித் திங்க வாணாம், அதிலயும் சாவு மோளமடிச்சி திங்க வாணாம்’ன்னு சொல்லி அயிதன். அவன் என்னெ எட்டி ஒதச்சிப்புட்டு எப்பிடியாச்சும் போடின்னு சொல்லிப்புட்டுப் போனான். அப்ப நான் ஒங்கால்ல வியிந்து பள்ளிக்கூடத்துக்குப் போ சாமின்னு கும்புட்டன். மத்த சனங்க மாரி நான் ஒன்னெ அதெ செய், இதெ செய், மாடு மேய்க்க, ஆடு மேய்க்கப் போன்னு சொன்னது கெடயாது. அதெல்லாம் ஒனக்கு நெனவுல இருக்கோ இல்லியோ. என்னால மறக்க முடியுமா? பெத்தவளாச்சே’ என்று சொல்லும் போதே மொட்டையம்மாளுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள். அவளுடைய உடம்பு குலுங்கியது. சேகர் எழுதுவதை நிறுத்திவிட்டு அழுதுகொண்டிருந்தவளையே பார்த்தவாறு இருந்தான் கொஞ்ச நேரத்திற்கு மேல் அவனுக்குப் பொறுமை இல்லை. ‘அப்பறஞ் சொல்லு’ என்று முறைத்தான். அதன் பிறகுதான் முகத்தை நிமிர்த்திக் கொண்டு மொட்டையம்மாள் மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

‘நான் சொல்றன்ங்கிறதுக்காக நீ ஒருத்தியயும்

கட்ட வாணாம். எனக்கு இவளத்தான் புடிச்சியிருக் குன்னு சொல்லி நீ ஒரு நரிகொறத்தியக் கொண் டாந்தாலும் எனக்குப் பரிபூரண சம்மதம்தான். எனக் கென்னா? நானா அவகூட குடும்பம் நடத்தப்போறன்? நான் கண்ணெ மூடிட்டப் பின்னாலெ இந்த

ஊடு இருளடஞ்சி கெடக்கக் கூடாது. அதத்தான் ஒங்கிட்டெ வேண்டுறன். நல்லது நடந்துச்சோ கெட்டது நடத்துச்சோ, எப்பிடியோ எங் காலம் ஓடிப்போயிடிச்சி. இனி ஒங் காலம்தான. எப்பிடியோ எங் காலமா இருந்தா ஒரு கைப்புடி சோள நொய்யும் ரெண்டு கொத்து முருங்க தவயும் இருந்தாப் போதும். ஒரு நாப் பொயிது ஓடிடும். இன்னிக்கி அப்பிடியா?’ என்று சொன்னவள், நிராசையுடன் சேகரிடம் கேட்டாள்: ‘என்னா தம்பி, நாலே

நாலு வரிதான் எயிதிருக்க? நான் சொன்னத எல்லாத் தயும் எயிதலியா?’

‘நீ சொன்னதுல ஒண்ணுகூட வுடலெ. வேணு மின்னா படிச்சிக்காட்டட்டா?’ என்று சட்டென்று கேட்டதும், ‘படி’ என்று சொல்லத்தான் நினைத்தாள். என்மேல் நம்பிக்கை இல்லையா என்று கேட்டுப் பாதியிலேயே போட்டுவிட்டுப் போய்விட்டால் என்ன செய்வதென்ற கவலையில் லேசாகப் பசப்புச் சிரிப்பு சிரித்து, ‘ஒம் பேர்ல நம்பிக்க இல்லாமியா?...இம்புட்டு நேரத்துக்கும் நாலே வரி எயிதிருக்கியே, கனமா இல்லியேன்னு கேட்டன்’ என்று சொல்லிப் பசப்பினாள்.

‘எல்லாம் சரியாத்தான் இருக்கு. கடேசிலே படிச்சிக்காட்டுறன். மேலெ சொல்லு’ என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுதுவதற்குத் தயாரானான்.

‘எந்த எடத்திலெ வுட்டன்?’ என்று மொட்டையம்மாள் கேட்டதும், ‘வனமயில் கண்ணாலம் கட்டுறதப் பத்தி’ என்று சேகர் எடுத்துக் கொடுத்தான். அவன் சொன்னதைக் காதில் வாங்காதவள் போல உட்கார்ந் திருந்தவள், திடீரென்று நினைவுக்கு வந்ததைச் சொல்வது மாதிரி சொன்னாள்.

‘தம்பி, ஒன்னோட பேர் நாமத்துக்கு பாத்தன். இன்னம் மூணு மாசத்துக்குள்ளார வெரய செலவு வரும்ன்னு இருக்காம். அதோடவும் நாடு வுட்டு நாடு போவணும்ன்னும் இருக்காம். கேடு காலம் வந்தா மணியடிச்சிக்கிட்டு வராது. போற, வர எடத்திலெ வாய் பதனமா, கை பதனமா இரு. காரு, ரயிலு ஏறயிலெ பாத்து ஏறு, பாத்து எறங்கு. ஒனக்கு ஒண்ணு ஆச்சின்னா அவ்வளவுதான். என் உசுரு தங்காது. ராவும் பவலும் ஒங் கவலதான் எனக்கு. ஒங்கூடப் பொறந்ததெல்லாம் உசுரோட இருந்திருந்தா எனக்கு இம்மாம் மனக்கவல இருக்காது. ஒங்கூடப் பொறந்தது மொத்தம் ஆறு புள்ளிவோ. மொத ரெண்டும் செத்துசெத்துப் பொறந்துச்சி. சாவு புள்ளெயா பெக்குறன்னு சொல்லி என் மாமியாக்காரி, அதாம் ஒப்பனப் பெத்த பாட்டியா, என்னெ ஒதுக்கிவச்சிட்டா. ஒப்பன் ஊட்டு சனங்களும் எங்கிட்டெ மொவம் கொடுத்துப் பேசாதுவோ. அந்தக் கெய்வி அம்மாம் கட்டுமானம் பண்ணிவச்சியிருந்தா. மூணாவதா நீ பொறந்த. புள்ளெ பெத்துக் கிடந்தவள என்னா ஏதுன்னு யாரும் வந்து எட்டிப் பாக்கலெ. நானேதான் பச்ச ஒடம்போட காயம் அரச்சித் தின்னன். அப்பறம் பொண்ணு ரெண்டு, ஆணு ஒண்ணு பொறந்துச்சி. வரிசியா புள்ளிவோ பொறந்தாலும் ஒண்ணும் நெலச்சித் தரிச்சி வாயல. அவசர அவசரமின்னு ஆறு மாசம் ஒரு வருசமின்னு ஒவ்வொன்னும் மண்ணுக் குள்ளாரப் போயிடிச்சிவோ. எல்லாத்தயும் வாரிக் கொடுத்துட்டன். ஒப்பனும் போயி சேந்துட்டான். இப்ப நீ ஒருத்தன்தான் இருக்க. நீதான் எனக்கு குல குருவா இருக்க. அப்பிடித்தான் நான் எண்ணிக்கிட்டிருக்கன். நீயும் எனக்குக் காம்பக் காட்டிப்புடாத.’

எழுதிக்கொண்டே, ‘இன்னம் இருக்கா?’ என்று சேகர் கேட்டான். அவன் கேட்ட விதத்தைப் புரிந்து கொள்ளாமல் கண்கள் கலங்க, உடைந்துபோன குரலில் மொட்டையம்மாள் தரையைப் பார்த்தவாறு சொன்னாள்.

‘ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு. நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும். தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன், வண்ணான், கூத் தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது. கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத. நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு. அதனால வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத. இதுக்கெல்லாம் நீ கையறுத்துக்க வேண்டியதில்லெ. ரெண்டு பயிர் ஆடு இருக்கு. இன்னிக்கி வித்தாக்கூட இருவதனாயிரம், முப்பதனாயிரம் போவும். அப்பப்ப ஆடு வித்தது, குட்டி வித்தது, சாவு ஆடு வித்ததுன்னு வந்த காசியில, ரெண்டு ஊட்டுக்குண்டான சாமான வாங்கிவச்சிருக்கன். ஒரு கூண்டு கோயி இருக்கு. அதெ வித்துக் காசாக்கிப்புடு. வாரத்துக்கு ஆறு பன்னிக்குட்டிவுளெப் புடிச்சிவுட்டிருக்கன். அதுவுளயும் காசாக்கிப்புடு. அதோட வடக்குத் தெரு காசியம்மா வல்லிசா மூணாயிரம் தரணும். வாங்கி ரெண்டு வருசமாச்சி. பாண்டு பத்திரமின்னு ஒண்ணுமில்லெ. பக்கத்து ஊட்டு வேலாயி மவ வயசிக்கு வந்தப்ப நானூறு வாங்குனா. கேட்டா ‘இந்தா இந்தா’ங்கிறா. காசி கையிக்கு வரல. இந்த மாரி இன்னம் ரெண்டு ஒருத்தர் தரணும். தோட்டி மவன் பெரிய பய கண்ணாலத்துக்கு ஒரு மரக்கா அரிசியும், ஒரு தூக்குப் புளியும், ரெண்டு பரங்கிக்காயும் வச்சன். இப்பிடி ஊரு மூச்சூடும் செய்வின செஞ்சி வச்சிருக்கன். நாளக்கி நம்பப் புள்ளெக்கி நாலு சனம் வரணுமே, செய்யணு மேன்னு, எல்லாத்தயும் ஊகமா ஒரு சீட்டுலெ எயிதி வச்சியிருக்கன். யாரும் திலுப்பி செய்யலன்னா கேக்கணு மில்லெ. அதுக்காக நாளு கெயமயோட விகரமா எயிதிவச்சிருக்கன்.’

‘சீட்டு ஆவப்போவுது. சீக்கிரமா சொல்லு.’

‘ஒரு சீட்டுதான் கொண்டாந்தியா?’

‘ஆமாம், ஆமாம்’

‘அப்ப இதெ மட்டும் எயிதிப்புடு’ என்று சொன்னவள், சந்தேகத்துடன் ‘இன்னம் ரவ எடந்தான் இருக்கா?’ என்று கேட்டாள். ஆமாம் என்பதுபோல் சலிப்புடன் தலையை மட்டும் ஆட்டினான் சேகர்.

‘ரெண்டே ரெண்டு வாத்ததான். எயிதிப்புடு’ என்றவள், சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள்.

‘அம்மா ஏதாச்சும் நெனச்சுக்குவான்னு பணம் காசி அனுப்பாத. சீல துணியும் வாணாம். நான் என்ன, எளங்குட்டியா புதுத் துணி கட்டிப்பாக்க, ஆசப்பட. எனக்காக நீ ஒன் ஒயலெ செலுவுபண்ணாத. ரத்த

ஓட்டம் இருக்கமுட்டும் நானே பாத்துக்கிறன்’ என்று சொன்ன மொட்டையம்மாள் சிறுபிள்ளை மாதிரி ஏக்கத்துடன் ‘இன்னம் ரவ எடமிருக்குமா?’ என்று கேட்டாள். இல்லை என்பதற்கு சேகர் உதட்டை மட்டுமே பிதுக்கிக் காட்டினான்.

சேகர் எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதுவதை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மொட்டையம்மாள். அவன் எழுதி முடித்துக் காகிதத்தை மடித்து உறைக்குள் போடப்போனபோது ரொம்ப ஆவலாக, ‘செத்த படிச்சிக்காட்டன்’ என்று கேட்டாள், ‘எல்லாம் சரியாத்தான் எயிதிருக்கு. மனுசனுக்கு வேற வேலெ இல்லியா?’ என்று வெடுக்கென்று சொன்னவன், காகிதத்தை உறைக்குள் போட்டு ஒட்டி, விலாசம் எழுதினான். அப்போது மொட்டையம்மாளின் முகம் மாறிற்று. வெறுப்புடன் அவனைப் பார்த்து ‘என்னாத்தெ எல்லாத்தயும் எயிதினெ? நான் இங்க சொவம். நீ அங்க சொவமா? ஊருலெ திருநா போட்டிருக்கு. அவசியம் வா. ஒங்கிட்டே நெறயா பேசணும். நேர்ல வா. எல்லாத்தயும் பேசிக்கலாமின்னு எயிதிருக்க. அதான? எனக்கு எல்லாமும் தெரியும்டா தம்பி’ என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து பிடுங்காத குறையாகக் கடித உறையை வாங்கிக்கொண்டாள்.உண்மை வெளிப்பட்டுவிட்ட வெட்கத்தில் சேகர் ஒன்றும் சொல்லாமல் அவசரமாக எழுந்து வெளியே போனான்.     

Read more from the April 2015 issue
Like what you read? Help WWB bring you the best new writing from around the world.